தொலைக்காட்சி

woensdag 17 augustus 2011

மர்மமனிதன் பிரச்சினை அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கை!- செய்தியாளர் மகாநாட்டில் யோகேஸ்வரன் எம்.பி.

Photo
[ புதன்கிழமை, 17 ஓகஸ்ட் 2011, 09:24.54 AM GMT ]
மர்ம மனிதன் பிரச்சினை
யில் அரசாங்கத்துக்கு பங்கிருக்கிறது. இதனை அரசாங்கம் மறுக்க முடியாது. இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறினார்.
இன்று மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற மர்மமனித செயற்பாடு சார்பான செய்தியாளர் மகாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இம் மாநாட்டில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பா.உ. யோகேஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது
மர்ம மனிதன் பிரச்சினையில் அரசாங்கத்துக்கு பங்கிருக்கிறது. இதனை அரசாங்கம் மறுக்க முடியாது. இதற்கான முடிவை ஜனாதிபதியும் அரசாங்கமும் விரைந்து எடுக்க வேண்டும். அரசாங்கம் சொல்வது போன்று ஒரே நேரத்திலா காமப் பசியும், மனநோயும் இன்னும் பலவும் ஏற்படும்? இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்றார்.
இப்பிரச்சினை அரசியல் பிரச்சினையாகப் பார்க்கப்படாமல் மனிதாபிமானப் பிரச்சினையாகக் கையாளப்பட வேண்டும். மட்டக்களப்புக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் வருகை தந்து இது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கையிலும் மர்ம மனிதன் பிரச்சினை நீடித்து வருகிறது.
நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். மாவட்டம், மாகாணம், வடக்கு - கிழக்கு என்று இல்லாமல் முழு நாட்டிலும் ஏற்பட்ட பிரச்சினை என்ற வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
இந்தப் பிரச்சினை மலையகத்தில் ஆரம்பித்து வேறு மாவட்டங்களில் பரவி, முஸ்லிம் பிரதேசங்களுக்குள் சென்று இப்போது தமிழ் பிரதேசங்களுக்குள் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் முஸ்லிம் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பேசிய அரசுடன் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் பின்னர் அரசின் பொய் என்ற கருத்துக்களை வெளியிடத் தொடங்கியமையினால் அம்மக்கள் மத்தியில் கவலை தோன்றியிருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் கட்சி என்ற வகையில் அந்த மக்களுக்காகவும் நடவடிக்கை எடுக்கும். வேலியே பயிரை மேய்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
நிலைமை கட்டுக்கடங்கா நிலைக்கு வந்திருக்கிறது. இந்த நிலை மக்கள் மத்தியில் அச்சத்தை கொண்டு வந்திருக்கிறது. எனவே இவ்விடயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இவ்வேளையில் அரசாங்கம் இந்த மர்ம மனிதன் பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறுமானால் பெரும் அபகீர்த்தியைச் சம்பாதித்துக் கொள்ள நேரிடும். மக்களுக்காக நியாய பூர்வமாக நீதியான ஒரு முடிவு காணப்பட வேண்டும்' என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த பொன் செல்வராசா எம்.பி.
இந்தச் சம்பவத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 60 வருட காலமாக அஹிம்சைப் போராட்டம் உட்பட அனைத்து போராட்ட வகைகளாலும் பாதிக்கப்பட்டு நொந்து போன தமிழ் மக்கள் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் போர் ஓய்ந்த பிறகு இப்போதும் இரவில் நிம்மதியாக நித்திரை செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை தோன்றியிருக்கிறது.
கிழக்கில் இறக்காமத்தில் தொடங்கி பொத்துவில் திருக்கோவில் என வந்து இப்போது தொடர்ச்சியாக தமிழ் பகுதிகளுக்குள் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கடந்த மூன்று தினங்களுக்கு முன் களுவன்கேணியில் நடைபெற்ற சம்பவத்தில் அக்கிராமத்திற்குள் வந்த கறுத்த முகமூடி அணிந்த மூன்றுபேர் பெண்களிடம் சேட்டை விட முயன்ற வேளை அவர்கள் சத்தமிட்டதனால் துரத்திச் செல்லப்பட்டு வேளை பொலிஸ் முகாமுக்குள் சென்றுள்ளனர். அதன் பின்னர் வெளிச்சங்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளது.
பின்னர் மக்கள் திரண்டுபொலிஸ் முகாமை முற்றுகையிட்டு பிரச்சினை செய்தவுடன் அங்குள்ள அதிகாரிகளை மாற்றுவதுடன் புதிதாக நியமிக்கப்படுபவர்களில் தமிழர்களையும் சேர்ப்பதாக உறுதியளித்தன் பின்னர் இப்போது அங்கு அமைதி நிலவுகிறது.
இதேபோன்று புதூர், குறிஞ்சாமுனை பிரதேசங்களிலும் சம்பவங்கள் நடைபெற்று மக்கள் வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். நாங்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று மக்களுடன் பேசித் தீர்வுகளுக்கு முயற்சித்திருக்கிறோம்.

இப்பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எமது தலைவர் இந்தியாவிலிருந்து நாளை வந்தவுடன் ஜனாதிபதியுடன் பேசி தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும்படி கோரவிருக்கிறோம்.
சம்பவம் நடைபெற்ற இடங்களில் மக்களால் விடுக்கப்பட்ட பொலிஸ் முகாம்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளுக்குப் பதிலாக அங்குள்ள உத்தியோகத்தர்களை மாற்றுவதற்கான தீர்வைப் பெற்றுத்தரலாம் என தெரிவித்து அதற்கு முயற்சித்தோம். அவ்வேளையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படியானால், மர்ம மனிதனையும் பொலிஸ் படைத்தரப்பு ஏற்றுக்கொள்கிறது. தாங்கள் அவர்களை மறைத்ததையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதே அர்த்தமாகிறது. இதனாலேயே இவற்றுக்குத் துரிதமாகத் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என மக்கள் கோருகின்றனர். அந்தவகையில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten