தொலைக்காட்சி

vrijdag 19 augustus 2011

மட்டக்களப்பில் இளைஞர்களை மீண்டும் சூடாக்குகின்ற நிலைமை

Video
மட்டக்களப்பில் இளைஞர்களை மீண்டும் சூடாக்குகின்ற நிலைமை தோன்றியுள்ளது – கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன்
[ வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2011, 06:46.13 AM GMT ]
இளைஞர்கள் சட்டத்தினை கையிலெடுக்கும் அளவுக்கு செல்லக்கூடாது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் மீண்டும் இளைஞர்களை சூடாக்குகின்ற நிலைமை வந்திருப்பதாக தெரிவித்தார்.
சோட்டாக்கன் காரத்தே சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் 35 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கட்டிட நிர்மாணப் பணிகளின் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சோட்டாக்கன் காரத்தே சங்கத்தின் தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாவதி பத்மராசா கிழக்கு மாகாண கட்டிட திணைக்களப் பணிப்பாளர் வேல்மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அங்கு அவர்தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்தமாவட்டத்திலே தற்போது ஒரு சிக்கலான சூழல் வந்திருக்கின்றது. இளைஞர்களை மீண்டும் சூடாக்குகின்ற ஒரு நிலைமை வந்திருக்கின்றது.
இதனைத்தாண்டி எவ்வாறு செல்லப்போகின்றோம் என்ற கவலையும் என்னிடம் உள்ளது.
இது எதற்காகவோ ஆரம்பிக்கப்பட்ட விடயம். இன்று ஒரு வித்தியாசமான கோணத்திலே கிட்டத்தட்ட இந்தியாவில் நடக்கும் நெருப்பு வைக்கும் நிலையை ஒத்து வந்திருக்கின்றது.
இது சற்று விரிவடையுமாகவிருந்தால் இதனால் பாதிக்கப்படப் போவது இளைஞர்களே. இதனை சமாளிக்கின்ற பொறுப்பு அறிவு ரீதியாக மிகவும் பொறுமையாக புத்துசாதுரியத்தோடு இளைஞர்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
உங்களையும் பாதுகாத்துக்கொண்டு உங்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருந்தாலும் அதனை உணர்ச்சிவசப்பட்டு எடுக்காத முடிவுகளோடு இளைஞர்கள் பார்க்கவேண்டும்.
எங்காவது பிரச்சினை பெரிதாக நடந்துவிட்டால் பொறுப்பெடுக்க பதவியை விட்டு விலகவேண்டியவர்கள் நாங்களாகவே இருப்போம். ஏனென்றால் இன்று அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகின்றோம் என்ற அடிப்படையில் நாங்கள் மிகவும் கடுமையான சூழலிலேயேதான் செயலாற்றி வருகின்றோம் என்பதுதான் உண்மை.
ஆகையினால் இளைஞர்கள் மிகுந்த கவனத்தோடும் அவதானத்தோடும் எமது சமூக கட்டுமானத்தில் இருந்து சமூக கட்டமைப்பில் இருந்து விலகாதவண்ணம் செயற்படவேண்டும். சட்ட ஒழுங்குகளுக்குள் செயற்படவேண்டும். அதிலும் சட்டத்தை கையில் எடுக்கின்ற அளவுக்கு சென்றுவிடக்கூடாது.
இலங்கையில் இருக்கின்ற சட்ட திட்டங்களை மதிக்க வேண்டிய பொறுப்பு இலங்கையில் இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் உள்ளது. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten