தொலைக்காட்சி

maandag 14 november 2011

ரகுவை புலிகள் கொலை செய்யவில்லை! சிங்கள பேரினவாதிகளே சுட்டுக் கொன்றனர்!- சி. சந்திரகாந்தன்


ரகுவை புலிகள் கொலை செய்யவில்லை! சிங்கள பேரினவாதிகளே சுட்டுக் கொன்றனர்!- சி. சந்திரகாந்தன்
[ திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011, 01:22.55 PM GMT ]
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவை ஒரு போதும் தமிழீழ விடுதலை புலிகள் கொலை செய்யவில்லை எனவும், சிங்கள பேரினவாதிகளே கொலை செய்தனர் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
ஆரையம்பதியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் மூன்றாவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் ரகு என அழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபன் கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ரகுவை அவர்கள் கொலை செய்ய சந்தர்ப்பம் இல்லை. மாறாக சிங்கள பேரினவாதமே ரகுவை கொலை செய்தது.
கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றவர் ரகுவே. நாங்கள் முதலமைச்சராக வேண்டும் என்றோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களாக வேண்டும் என்றோ அரசியலுக்கு வரவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறுவது சரியானதும் சாத்தியமானதும் என்றிருந்தால் நாங்கள் அவர்களுக்கு பின்னால் சென்றிருப்போம். அவர்கள் கூறுவது சாத்தியமற்றது. சாதிக்க முடியாதவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். அதனால் தான் நாங்கள் கிழக்கு மாகாணத்தை கையிலெடுத்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசும் உணர்ச்சி பேச்சு தான் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
காசி ஆனந்தன் இந்தியாவிலிருந்து கொண்டு வீர வேசமாக பேசியுள்ளார். காசி ஆனந்தனும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவிலேயே வசிக்கின்றனர். அவரது பிள்ளைகள் இந்தியாவிலேயே கல்வி கற்கின்றனர். இவரின் வீரப் பேச்சு குழப்பதையே ஏற்படுத்தும். மாறாக எந்த தீர்வையும் கொண்டு வராது.
மீண்டும் தமிழ் மக்களை அழிப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி இடமளிக்காது. சிங்கள பேரினவாதிகளுடன் போராடியாவது எமது மக்களுக்கு நாம் சரியாக வழி காட்டுவோம்.
ரகுவின் கொலை நன்கு திட்மிட்டு இடம்பெற்றதாகும். கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கொள்கையை நிலைநாட்டி வெற்றி கொள்ள செய்த ரகு நோர்வேயில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் பின்னணியிலிருந்து செயற்பட்டவர்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை கிழக்கு மாகாணத்துக்கு என அவர் உருவாக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்த அவரது கொள்கையை வெற்றியடைய செய்வதே அவருக்கு நாம் செலுத்துகின்ற அஞ்சலியாகும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten