தொலைக்காட்சி

donderdag 24 november 2011

பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ச மீது தண்ணீர்போத்தல் வீச்சு! - ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகலப்பு! ஐ.தே.க.வினர் வெளிநடப்பு

பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ச மீது தண்ணீர்போத்தல் வீச்சு! - ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகலப்பு! ஐ.தே.க.வினர் வெளிநடப்பு
[ திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011, 12:34.06 PM GMT ]
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சியினர் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஜனாதிபதி மீது தண்ணீர் போத்தல் வீசித் தாக்கியுள்ளனர்.
இதன்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதோடு ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி. ஹரின் பெர்னாண்டோ மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மீது புத்தகம் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினர் மீது தண்ணீர் போத்தல்களை வீசி எறிந்தனர். அதே சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி தரப்பினரிடமிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது தண்ணீர் போத்தல் வீசப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினர் சபையை விட்டு வெளியேறினர். ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் முன்னிலையில் ஆளும் கட்சியினரின் வன்முறை! ஐக்கிய தேசியக் கட்சியினர் வெளிநடப்பு
2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவேளையில் அரசாங்கக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தை தவறி நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நிதியமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்தபோது. அதில் அடங்கியுள்ள யோசனைகளை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று மொழிகளில் வெட்கம் என்று எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தி அவர்கள் கோசமிட்டனர்.
இதனையடுத்து கோபமுற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் பக்கம் சென்று தகராறில் ஈடுபட்டனர்.
இதில் கண்டி மாவட்ட ஆளும் கட்சி உறுப்பினர் லொஹான் ரத்வத்த, எதிர்க்கட்சியின் முதல்வர், ஜோன் அமரதுங்கவிடம் சென்று அவரின் கைகளில் இருந்த சுலோகங்களை பறித்து கிழிந்தெறிந்தார்.
இதனையடுத்து முன்னே வந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஜோன் அமரதுங்க, ஓடிச்சென்று தமது ஆசனத்திற்கு சென்றார்.
லொஹான் ரத்வத்தையின் இந்த வன்முறைச் செயற்பாட்டை அடுத்து ஏனைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியினரின் ஆசனங்கள் பக்கம் சென்று வன்முறைகளில் ஈடுபட்டனர்.
இதில் பொலநறுவை நாடாளுமன்ற உறுப்பினர் ரொஸான் ரணசிங்க, பதுளையின் சம்மிக்க புத்ததாஸ, உதித் லொக்குபண்டார ஆகியோரும் அடங்குவர்.
இந்தவேளையில் ஆளும் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி, போத்தல்களை எறிந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோவுடன் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்ததாஸ கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டார்.
இலங்கையின் பிரதி கல்வி அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேசைகளில் இருந்த புத்தகங்களையும் ஆவணங்களையும் வீசி எறிந்தார்.
துறைமுக பிரதி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
எனினும் அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட சிலர், நிலைமையை கட்டுப்படுத்த முனைந்தனர்.
இந்த சம்பவத்தை சபாநாயகரின் பார்வையாளர் வரிசையில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பார்த்தனர்.
சம்பவத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் நாடாளுமன்ற அமர்வுகளில் இருந்து வெளியேறினர்.
ஸ்ரீலங்கா அரசாங்கம், நாடாளுமன்றத்திற்குள்ளும் உரிமைகளை நசுக்க முனைவதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.
எனினும் வரவுசெலவுத்திட்ட உரையை ஆற்றிக்கொண்டிருந்த ஜனாதிபதி இதனை கண்டுக்கொள்ளாத நிலையில் தமது வரவுசெலவுத்திட்ட உரையை தொடர்ந்தார்.

Geen opmerkingen:

Een reactie posten